பாரதியார் கவிதைகள்



மனதிலுறுதி வேண்டும்

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

890  likes

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

1179  likes

சுட்டும் விழிச் சுடர் தான்

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

1014  likes

வீணையடி நீ எனக்கு

பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!

904  likes