பாரதியார் காதல் கவிதைகள்



சுட்டும் விழிச் சுடர் தான்

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

1018  likes

வீணையடி நீ எனக்கு

பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!

910  likes

காலனுக்கு உரைத்தல்

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)


சரணங்கள்

வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)

ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)*

583  likes

செஞ்சுருட்டி - ஆதிதாளம்

தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!
மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவே
பாவை தெரியு தடி!

மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியே
வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்!
மோனத் திருக்குதடீ! இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே,
நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்
நரகத் துழலுவதோ?

கடுமை யுடைய தடீ!எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான்
அங்கு வருதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள்-எதற் காகவோ
நாணிக் குலைந்திடுவாள்.

கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே
ஆடி விளை யாடியே,-உன்றன் மேனியை
ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே
பாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி!”

570  likes