பாரதிதாசன் கவிதைகள்



இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்றுபேர்! -- இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !
தமிழுக்கு மணமென்று பேர் ! -- இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழுக்கு மதுவென்று பேர்! -- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -- இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -- இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -- இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -- இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ

272  likes

தமிழ் உணவு

ஆற்றங் கரைதனிலே -- இருள்
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்,
காற்றில் உட்கார்ந்திருந்தேன் -- வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர் -- வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார்! பழச்
சாற்றுச் சுவைமொழியார் -- சிலர்
தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர்; (ஆற்றங்கரைதனிலே)

நாட்டின் நிலைபேசிப் -- பல
நண்பர்கள் கூடி இருந்தனர் ஓர் புறம்
ஓட்டம் பயின்றிடுவார் -- நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்;
கோட்டைப் பவுன் உருக்கிச் செய்த
குத்துவிளக்கினைப் போன்ற குழந்தைகள்
ஆட்டநடை நடந்தே -- மண்ணை
அள்ளுவர் வீழுவர் அம்புலி வேண்டுவர்; (ஆற்றங்கரைதனிலே)

புனலும் நிலாவொளியும் -- அங்குப்
புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில்
இனிது பறந்து பறந் -- தங்கும்
இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள் !
தனிஒரு வெள்ளிக்கலம் -- சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நக்ஷத்திரம்!
புனையிருள் அந்திப் பெண்ணாள் -- ஒளி
போர்தத்துண்டோ எழில் பூத்ததுண்டோ அந்த (ஆற்றங்கரைதனிலே)

விந்தை உரைத்திடுவேன் -- அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்த ஓர் பாட்டுரைத்தாள் -- அது
முற்றும் தெலுங்கில் முடிந்து தொலைந்தது!
பிந்தி வடக்கினிலே -- மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்
எந்தவிதம் சகிப்பேன்? -- கண்ட
இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன; (ஆற்றங்கரைதனிலே)

263  likes

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்:
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்தமிழுடன் பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென்று ஊதூது சங்கே!
பொங்கும் தமிழர்க்கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்.
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனில்கமழ்ந்து லீரஞ்செய்கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்! (எங்)

241  likes

பெண்களைப் பற்றிப் பெர்னாட்ஷா

புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா உரைத்த
பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!
அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!

அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்
அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்?
கவலையுற ஆடவர்கள் நாளும் செய்யும்
கணக்கற்ற ஊழல்களை யெல்லாம் அந்த
நவையற்ற பெண்களன்றோ விலக்குகின்றார்?
நானிலத்தில் மார்தட்டும் ஆடவர்கள்
சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்கதான
சூக்ஷீமமும் பெண்களிடம் அமைந்ததன்றோ!

கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்!
வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தைகேட்டீர்
மனோபாவம் இனியேனும் திருந்தவேண்டும்.
இல்லையெனில் எதுசெயலாம்! பெண்ஆண்என்ற
இரண்டுருளையால்நடக்கும் இன்பவாழ்க்கை!

251  likes