பாரதிதாசன் கவிதைகள்



கைம்மைக் கொடுமை

கண்கள் நமக்கும் உண்டு -- நமக்குக்
கருதும் வன்மை யுண்டு
மண்ணிடைத் தேசமெல்லாம் -- தினமும்
வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
எண்ண இயலாத -- புதுமை
எதிரில் காணுகின்றோம்
கண்ணிருந்தென்ன பயன்? நமக்குக்
காதிருந்தென்ன பயன்?

வானிடை ஏறுகின்றார் -- கடலை
வசப்படுத்துகின்றார்
ஈனப் பொருள்களிலே -- உள்ளுறை
இனிமை காணுகின்றார்
மேனிலை கொள்ளுகின்றார் -- நாமதை
வேடிக்கை பார்ப்பதல்லால்
ஊன்பதைத்தே அவைபோல் -- இயற்ற
உணர்ச்சி கொள்வதில்லை.

புழுதி, குப்பை, உமி -- இவற்றின்
புன்மைதனைக் களைந்தே
பழரசம் போலே -- அவற்றைப்
பயன்படுத்துகின்றார்!
எழுதவும் வேண்டாம் -- நம்நிலை
இயம்பவும் வேண்டா!
அழகிய பெண்கள் -- நமக்கோ
அழுகிய பழத்தோல்!

கைம்மை எனக்கூறி -- அப்பெரும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் -- இதய
நடுவிற் பாய்ச்சுகின்கிறோம்.
செம்மை நிலையறியோம் -- பெண்களின்
சிந்தையை வாட்டுகின்றோம்;
இம்மை இன்பம் வேண்டல் -- உயிரின்
இயற்கை என்றறியோம்.

கூண்டிற் கிளிவளர்ப்பார் -- இல்லத்தில்
குக்கல் வளர்த்திடுவார்,
வேண்டியது தருவார்; -- அவற்றின்
விருப்பத்தை அறிந்தே!
மாண்டவன் மாண்டபின்னர் -- அவனின்
மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை -- ஐயகோ,
அடிமைப் பெண்கதியே!

279  likes

கைம்பெண் நிலை

கண்போற் காத்தேனே -- என்னருமைப்-
பெண்ணை நான்தானே (கண்)

மண்ணாய்ப் போன மாப் பிள்ளை
வந்ததால் நொந்தாள் கிள்ளை
மணமக னானவன் -- பிணமகனாயினன்
குணவதி வாழ்க்கை எவ் -- வணமினி ஆவது? (கண்)

செம்பொற் சிலை, இக் காலே
கைம் பெண்ணாய்ப் போன தாலே
திலகமோ குழலில் -- மலர்களோ அணியின்
உலகமே வசைகள் -- பலவுமே புகலும் (கண்)

பொன்னுடை பூஷ ணங்கள்
போக்கினாளே என் திங்கள்!
புகினும் ஓர் அகம் சகுனம் தீதென
முகமும் கூசுவார் -- மகளை ஏசுவார்! (கண்)

தரையிற் படுத்தல் வேண்டும்
சாதம் குறைத்தல் வேண்டும்
தாலியற்றவள் -- மே லழுத்திடும்
வேலின் அக்ரமம் -- ஞாலம் ஒப்புமோ? (கண்)

வருந்தாமல் கைம்பெண் முகம்
திருந்துமோ இச்சமுகம்
மறுமணம் புரிவது -- சிறுமைஎன்றறைவது
குறுகிய மதியென -- அறிஞர்கள் மொழிகுவர் (கண்)

275  likes

உலக ஒற்றுமை

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என் சிற்றூர் என்போன் உள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை உள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்புறுத்தல்!

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,
அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க
வாயடியும் கையடியும் வளரச் செய்வார்!
மாம்பிஞ்சு உள்ளத்தின் பயனும் கண்டோம்!
தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் 'ஓன்றே' என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்த்ததாலே.

269  likes

தொழிலாளர் விண்ணப்பம்

காடு களைந்தோம் -- நல்ல
கழனிதிருத்தியும் உழவுபுரிந்தும்
நாடுகள் செய்தோம் -- அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோம் -- அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோம் -- புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.

மலையைப்பிளந்தோம் -- புவி
வாழவென்றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல்மீதில் -- பல்
லாயிரங்கப்பல்கள் போய்வரச்செய்தோம்
பல தொல்லையுற்றோம் -- யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்.
உலையில் இரும்பை -- யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந்தந்தோம்.

ஆடைகள் நெய்தோம் -- பெரும்
ஆற்றைவளைத்து நெல்நாற்றுகள் நட்டோம்;
கூடைகலங்கள் -- முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க -- யாம்
குடையளித்தோம் நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் -- இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.

வாழ்வுக்கொவ்வாத -- இந்த
வையத்தை இந்நிலை எய்தப்புரிந்தோம்,
ஆழ்கடல், காடு, -- மலை
அத்தனையிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை, அசுத்தம் -- குப்பை
இலைஎன்னவே எங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக்கிடந்தோம் -- புவித்
தொழிலாளராம் எங்கள் நிலைமையைக் கேளீர்!

கந்தையணிந்தோம்! -- இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்
மொந்தையிற் கூழைப் -- பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் -- யாம்
சந்ததம் தங்கிட வீடுமில்லாமல்
சிந்தை மெலிந்தோம் -- எங்கள்
சேவைக்கெலாம்இது செய்நன்றிதானோ?

மதத்தின் தலைவீர்! -- இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!
குதர்க்கம் விளைத்தே -- பெருங்
கொள்ளை யடித்திட்ட கோடீ சுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே -- சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் -- விளை
நிலமுற்றும் உங்கள்வசம் பண்ணிவிட்டீர்.

செப்புதல் கேட்பீர்! -- இந்தச்
செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின்.
கப்பல்களாக -- இனித்
தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!
இப்பொழுதே நீர் -- பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்படைப்பீரே -- எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே

320  likes